இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி இலங்கையின் கொழும்பில் துறைமுக முனைய திட்டத்தை செயல்படுத்த உள்ளார்.
இந்நிலையில், இத்திட்டத்தில் 553 மில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்காவை சேர்ந்த அரசு நிறுவனமான சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடாக இது பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்கு முன்பு, சீன துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களில் பெருமளவு கடன் வாங்கியதால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் முயற்சிகளின் ஒருபகுதியாக சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்தின் இந்த நிதியுதவி பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கையில் துறைமுக திட்டங்களில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்தும் நோக்கிலானதாகவும் அமெரிக்காவின் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வறிக்கை ஒன்றில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளுடன் மோசடி செய்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு பல பில்லியன்கள் குறைந்தது. தற்போது மீண்டும் ஓரளவுக்கு எழுந்துள்ள அதானி குழுமத்திற்கு, அமெரிக்காவின் நிதியுதவி சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ‘நான் ரெடிதான் வரவா...’ ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் சுப்மன் கில்!
2023ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்தின் மொத்த உலகளாவிய முதலீடான 9.3 பில்லியன் டாலரில் அதானி துறைமுகமும் அடங்கும். ”கொழும்புவில் உள்ள ஆழ்கடல் மேற்கு கன்டெய்னர் டெர்மினல் (deepwater West Container Terminal), ஆசியாவிலேயே அமெரிக்க அரசு நிறுவனத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு முதலீடு ஆகும். இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கிய கூட்டாளியான இந்தியா உட்பட அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஊக்கமளிக்கும்” என அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ’கொழும்புத் துறைமுகம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் 90 சதவீதத்துக்கும் அதிகமான பயன்பாட்டில் இயங்கி வருவதாகவும், எனவே, அதற்கு புதிய திறன் தேவை’ என்றும் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நிலவரப்படி இலங்கையில் சீனா 220 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது. பல்வேறு வளரும் நாடுகளின் மோசமான பொருளாதார நிலையை பயன்படுத்தி நிதியுதவி அளித்து, அவற்றை கடன் வலையில் சிக்கவைத்துக் கொண்டிருப்பதாக சீனா மீது விமர்சனங்கள் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இலங்கையின் அதிகம் பயன்படுத்தப்படாத தெற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் நீடித்து நிலைக்க முடியாதது என்றும், அது சீனாவின் கடன்-பொறி ராஜதந்திரம் என்றும் அமெரிக்கா வெளிப்படையாக விமர்சித்துள்ளது.