அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு 101 கோடி ரூபாய் செலவிடுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.
இஸ்தானாவில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் லீ இதனைத் தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் நாளை சந்திக்கின்றனர். நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்த உச்சி மாநாட்டுக்காக சிங்கப்பூர் அரசு 101 கோடி ரூபாய் செலவிடுவதாக பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். இந்த செலவு முழுவதையும் சிங்கப்பூர் அரசு ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு நிகழும் சென்டோசா தீவு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் - கிம் சந்திப்பு தொடர்பான செய்திகளை சேகரிக்க உலக நாடுகளில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்த கிம் ஜாங் உன்னை பிரபல செயின்ட் ரீஜிஸ் ஹோட்டலில் தங்க வைக்கபட்டுள்ளார்.இதனால் அப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் - கிம்முடனான சந்திப்பு உலக நாடுகளிடையே மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.