பாகிஸ்தானில் இந்து மாணவி மரணமடைந்த வழக்கில் உடன் படித்த 2 மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கோட்கி பகுதியை சேர்ந்தவர் நம்ரிதா சாந்தினி. இந்த பகுதியில்தான் சமீபத்தில் இந்துகோயில்கள் அடித்து உடைக்கப்பட்டன. சாந்தினி, லார்கானாவில் விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த திங்கள்கிழமை விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அறை பூட்டப்பட்ட நிலையில் கட்டிலில் அவர் உயிரிழந்து கிடந்தார். அவர் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து கராச்சியின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. நம்ரிதாவின் சகோதரர் விஷால் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’நம்ரிதா நன்றாக படிக்கக் கூடியவர், புத்திசாலிப் பெண். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். அவரது கழுத்துப் பகுதி கேபிள் வயரால் இறுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினருக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து விசாரித்த போலீசார், அவருடன் படித்த அலி ஷான் மேமன், மெஹ்ரான் அப்ரோ ஆகியோரை கைது செய்துள்ளனர். சாந்தினி தன்னை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் மெஹ்ரான். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.