கார் டயருக்குள் சிக்கிக்கொண்டு போராடிய செல்ல நாயை, அவசரகால சேவை பிரிவை சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் சிலி நாட்டில் நடந்துள்ளது.
சிலி நாட்டில் உள்ள அண்டோபகாஸ்டா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் கார் டயர் ஒன்று கிடந்தது. அங்கு வந்த எட்டு மாத பெண் நாய் ஒன்று ஜாலியாக விளையாடி கொண்டிருந்தது. கார் டயரை தலையால் முட்டி விளையாடிய போது, அதன் தலை, நடுவில் இருந்த வட்டத்துக்குள் நுழைந்துவிட்டது.
தலையை நாயால் வெளியே எடுக்க முடியவில்லை. நகர கூட முடியாமல் தவித்து வந்த அந்த பெண் நாயை அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றனர். முடியவில்லை. பின்னர் இதுபற்றி அவசர சேவை பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்து வந்த அவசர சேவை பிரிவினர், பெட்ரோல் ஜெல்லியை கழுத்தில் தடவி, நாயின் முகத்தை பிடித்து அங்கும் இங்கும் ஆட்டி, மெதுவாக உள்ளே தள்ளினர். சில நிமிட போராட்டத்துக்குப் பின் நாயின் தலை வெளியே வந்தது.
இதையடுத்து அந்த நாயை ஒரு கூடைக்குள் அடைந்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்தனர்.