நியூயார்க் விமான நிலையத்தில் சீக்கிய டாக்சி ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளது இந்திய தூதரகம்.
ஜனவரி 4 அன்று, நவ்ஜோத் பால் கவுர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய தேதி குறிப்பிடப்படாத 26 நொடிகள் கொண்ட வீடியோவில், நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சீக்கிய டாக்ஸி டிரைவரை ஒருவர் தாக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்தும் அந்நபர், கடுமையான வார்த்தைகளால் திட்டுவதோடு, அவரை அடித்து, அவரது தலைப்பாகையை பிடுங்க முயல்கிறார்.
“இந்த வீடியோ நான் எடுத்தது அல்ல. இந்த வீடியோ நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஒருவரால் எடுக்கப்பட்டது. நமது சமூகத்தில் வெறுப்பு தொடர்ந்து நீடிக்கிறது என்பதையும், துரதிர்ஷ்டவசமாக சீக்கிய டாக்சி ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாவதையும் நான் வெளிக்கொணர விரும்புகிறேன்” என்று தனது ட்வீட்டில் நவ்ஜோத் பால் கவுர் கூறியுள்ளார். இச்சம்பவத்திற்கு சீக்கிய சமூகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், “நியூயார்க்கில் சீக்கிய டாக்ஸி ஓட்டுநருக்கு எதிரான தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. நாங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் இவ்விவகாரத்தை எடுத்து சென்றோம். இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்கும்படி அவர்களை வலியுறுத்தினோம்” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சீக்கிய டாக்ஸி ஓட்டுனர் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2017, 2019ஆம் ஆண்டுகளில் சீக்கிய டாக்சி ஓட்டுநர்கள் தாக்குதலுக்கு உட்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.