பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக இருக்கும் ஷாகித் கஹாகான் அப்பாஸி நியமிக்கப்பட்டார்.
பனாமா ரகசிய ஆவணங்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நவாஸ் ஷெரீஃப் தலைமையில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர், ஷேபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.