உலகளவில் சுறா மீன்கள் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விட செல்ஃபி எடுக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகமாக உள்ளது. செல்ஃபி எடுக்கும்போது உயிரிழந்தவர்களில் இரண்டில் ஒரு பங்கு பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னைத்தானே சுயமாகப் படம்பிடித்துக் கொள்வதுதான் செல்ஃபி. இந்த மோகத்தால் பல விபரீதங்கள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அபாயகரமான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து பல உயிர்கள் பறிபோய் உள்ளன.
இந்நிலையில், 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் உலகளவில் செல்ஃபி எடுத்ததால் 259 பேர் உயிரிழந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதே காலங்களில் சுறா மீன்கள் தாக்கியதில் 50 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, செல்ஃபி எடுத்தவர்களில் பெண்கள், இளைஞர்களே அதிகளவு உயிரிழந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, இந்தியாவில் தான் செல்ஃபி எடுத்தவர்களில் அதிகம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
குறிப்பாக, 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை உலகளவில் செல்ஃபி எடுத்தவர்களில் உயிரிழந்ததில் பாதிபேர் இந்தியர்கள் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் காலங்களில் இந்தியாவில் செல்ஃபி எடுக்கும்போது விபத்தில் சிக்கி 159 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் உயரமான பாலங்களில் இருந்தும், உயரமான கட்டிடங்களில் இருந்தும் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டே பலர் உயிரிழப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்த செல்ஃபி மோகம் மக்களவை வரை கூட எதிரொலித்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற மக்களவையில் பேசிய எம்.பிக்கள் ஓம் பிரகாஷ் யாதவ், ஹரி சந்திரா ஆகியோர், செல்ஃபி எடுப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மத்திய அரசின் நடவடிக்கை என்ன? செல்ஃபி பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள் என்ன? என கேள்வி எழுப்பி செல்ஃபி குறித்த விவாதத்தையும் நடத்தினர்.