சானிட்டரி பொருட்களை அனைத்து தரப்பு பெண்களுக்கும் இலவசமாக வழங்கும் முதல் நாடாக ஸ்காட்லாந்து மாறவுள்ளது.
பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று மாதவிடாய் காலம். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு கொடூரமான வேதனையை கொடுத்து வருகிறது. மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தும் பழக்கம் தற்போதுதான் பெண்களிடையே வழக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், பணம் கொடுத்து தொடர்ச்சியாக வாங்க முடியாததால் பல பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்துவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் சட்ட மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் இது நடைமுறைக்கு வரும். இதற்கு அந்நாட்டு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.