தனது மகனின் பிறந்த நாளுக்காக, 2 விமானங்களை சவுதி தொழிலதிபர் ஒருவர் பரிசளித்ததாக பரபரப்பு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஆச்சரிய செய்தி ஒன்று அனல் பறக்க வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்தியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் இந்த செய்தி பரபரப்பாகப் பகிரப்பட்டது. அதில், தனது மகனின் பிறந்த நாளுக்கு மினியேச்சர் விமானத்துக்குப் பதிலாக, நிஜமான இரண்டு, ஏர்பஸ் 1000 விமானங்களை வாங்கி சவுதி தொழிலதிபர் பரிசளித்ததாகக் கூறப்பட்டிருந்தது.
பேஸ்புக்கில் இந்த செய்தி 3 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பகிரப்பட்டது. இன்ஸ்டாகிராமில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றது. இது உண்மையாக இருந்தால் சூப்பரான கதை என்று சில சமூகவலைத்தளவாசிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த செய்தியை வெளியிட்ட இணையதளம், இது ஜாலிக்காக எழுதப்பட்டது என்று கூறியிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே இதன் உண்மைத்தன்மை பற்றி அறியாமல் பலர் இதை பகிர்ந்துள்ளனர்.
ஏர்பஸ் நிறுவனம் கூறும்போது, ‘’விமானங்களை வாங்குவதற்கு நீண்ட நடைமுறையை பின்பற்ற வேண்டியிருக்கிறது. சும்மா கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்துவிட்டு விமானங்களை வாங்கிவிட முடியாது’’ என்று விளக்கம் அளித்துள்ளது.