கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தாருடன் தூதரக உறவை முறித்து கொண்ட சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள், தற்போது கத்தாருக்கு 13 நிபந்தனைகளை விதித்துள்ளது. இதை நிறைவேற்றும் பட்சத்தில் கத்தாருடனான தடையை விலக்குவது குறித்து பரிசீலிப்பதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
கத்தார் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர, அரபு நாடுகள் விதித்த 13 நிபந்தனைகள்:
1.ஈரானுடனான உறவை துண்டிப்பதோடு, அவர்களுடன் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்ய வேண்டும். அமெரிக்கா மற்றும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே ஈரானுடன் வணிகம் செய்ய வேண்டும்.
2.கத்தாரில் உள்ள துருக்கி படையை திரும்ப அனுப்புவதோடு, அவர்களுடனான ராணுவ ஒப்பந்தங்களையும் கைவிட வேண்டும்.
3.ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா மற்றும் லெபனானின் ஹிஸ்பொல்லா உள்ளிட்ட அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்க வேண்டும்.
4. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, பஹ்ரைன் மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாதிகள் என குறிப்பிட்ட தனிநபர், குழு அல்து அமைப்புகளுககு நிதியளிக்கும் வழிமுறை நிறுத்த வேண்டும்.
5. 4 நாடுகளால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டு தேடப்படுபவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களின் சொத்து மற்றும் பணபரிவர்த்தனையை உடனடியாக முடக்க வேண்டும்.
6. கத்தாரை மையமாக கொண்டு செயல்படும் சர்வதேச ஊடகமான அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும்.
7. இறையாண்மை நாடுகளின் உள் விவகாரங்களில் குறுக்கீடு, மற்றும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபுநாடுகள், எகிப்து ஆகிய நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
8. அண்மைக் காலமாக கத்தாரால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் உயிரிழப்புகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும்.
9. சவுதி அரேபியாவால் 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று வளைகுடா மற்றும் அரபு நாடுகளுடனான அரசியல், சமூகம், பொருளாதார நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.
10. சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடனான தொடர்பை கத்தார் துண்டிக்க வேண்டும்.
11.கத்தார் நிதியை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்று நடத்தும் செய்தி நிறுவனங்களான அரபி 21, அல் - ஜதீத், மிட்டில் ஈஸ்ட் ஐ உள்ளிட்டவற்றையும் மூட வேண்டும்.
12. தங்களது கோரிக்கைகளை கத்தார் ஒப்புக்கொண்ட பிறகு முதல் ஆண்டிற்கான மாதந்திர தணிக்கைக்கு ஒப்புதல் 2ம் ஆண்டில் காலாண்டிற்கான தணிக்கை ஒப்புதல் மற்றும் 10 ஆண்டுகள் வரை வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13. இந்த நிபந்தனைகளை 10 நாட்களுக்குள் ஏற்க வேண்டும். இல்லையெனில், கத்தாருடனான தூதரக உறவுகள் நிரந்தரமாகத் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.