சவுதி அரேபியாவில் நடந்த ஒரு பெண்கள் அமைப்பு தொடக்கவிழா, மேடையில் ஒரு பெண் கூட இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.
அல்-காசிம் என்ற மாகாணத்தில் இளம் பெண்களுக்கான அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. இதற்கான முதல்கூட்டம் நடைபெறப் போவதாகவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை விழாவும் நடந்தது. ஆனால், மேடையில் ஒரு பெண்ணுக்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. விழா அரங்கிலும் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. மேடையில் அமர்ந்திருந்த 13 பேரும் ஆண்கள். பெண்கள் அனைவரும் அருகில் இருந்த ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தனர். வீடியோ மூலமாகவே அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆண்கள் மட்டுமே மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியச் சட்டப்படி, பொது நிகழ்ச்சிகளில் உறவினர் அல்லாத ஆண்களுடன், பெண்கள் பங்கேற்பது தடை செய்யப்பட்டிருக்கிறது.