சவுதியில் அரசை கவிழ்க்க சதி? இளவரசர்கள் கைது !

சவுதியில் அரசை கவிழ்க்க சதி? இளவரசர்கள் கைது !
சவுதியில் அரசை கவிழ்க்க சதி? இளவரசர்கள் கைது !
Published on

சவுதி அரேபியாவில் மன்னர் சல்மானின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக மூன்று இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் அரியணை மீதான தனது பிடியை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

சவுதி அரேபிய மன்னர் சல்மானின் அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக அவரின் சகோதரர்களில் ஒருவரான அகமது பின் அப்துல் அசீஸ் அல் சாவ்த், மன்னரின் மருமகன் முகமது பின் நயீஃப் ஆகியோர் மன்னரின் பிரத்யேக பாதுகாவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவருமே அரியணைக்கு போட்டி போடுபவர்களாக இருந்தவர்கள். முகமது பின் நயீஃபின் இளைய சகோதரர் நவாஃப் பின் நயீஃப்பும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கைது, அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்குவதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்திருக்கும் மற்றொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளை முகமது பின் சல்மான் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தமக்கு எதிராக அதிருப்தி குரல் எழுப்பிய மதகுருக்கள், இளவரசர்கள், வணிகர்கள் என பலரையும் இளவரசர் முகமது பின் சல்மான் கைது செய்திருக்கிறார்.

அவரை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கி தூதரகத்தில் 2018ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில்தான் எதிர்காலத்தில் தமது அதிகாரத்திற்கு போட்டியாக வரக்கூடிய மன்னர் குடும்பத்தினர் மீதும் தனது அதிகாரத்தை திருப்பியுள்ளார், முகமது பின் சல்மான். மன்னர் சல்மானிடமிருந்து முறையாக முழு அதிகாரமும் வந்து சேருவதற்குள் தனக்கு எதிரான குரல்களை முழுமையாக ஒடுக்குவதில் குறியாக இருக்கிறார் இளவரசர் முகமது பின் சல்மான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com