உக்ரைன் தேவாலயத்தில் 45 அடி நீள அகழி கல்லறை! அதிர்வலைகளை கிளப்பும் சாட்டிலைட் படங்கள்!
உக்ரைன் நாட்டில் புச்சா நகரில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் அந்நகரின் தேவாலயத்தில் 45 அடி நீள அகழி ஒன்று இருப்பதாகவும் அங்கு மக்கள் புதைக்கப்பட்டு கல்லறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கு மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டின் புச்சா நகரிலும் ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திவிட்டு மார்ச் மாதம் இறுதியில் அந்நகரை விட்டு வெளியேறியது. மார்ச் 31 அன்று அந்நகரில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. புச்சா நகரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் 45 அடி நீளத்திற்கு அகழி ஒன்று புதிதாக தோண்டப்பட்டுள்ளது சாட்டிலைட் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. இந்த அகழியை அப்பாவி மக்களை அடக்கும் செய்யும் கல்லறையாக ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரேனிய துருப்புக்களால் மீட்கப்பட்ட நகரங்களில் புச்சாவும் ஒன்று. ரஷ்யப் படைகள் புச்சா நகரத்தில் ஒரு "படுகொலை" நடத்தியதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது ரஷ்யா. இது உக்ரைனின் "ஆத்திரமூட்டும் நடவடிக்கை" என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
புச்சாவுக்குச் சென்ற சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், புச்சா நகரின் தெருக்களில் சடலங்கள் கிடப்பதைக் கண்டனர். தேவாலயத்தில் ஒரு வெகுஜன கல்லறை இன்னும் திறந்த நிலையில் இருந்ததாகவும், மேலே குவிக்கப்பட்ட சிவப்பு களிமண்ணின் வழியாக கைகளும் கால்களும் வெளியே தெரியும்படி அவை காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.