அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பிலான போலி ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை எஃப்.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீனாவில் போலியாக தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்து ஒரு கும்பல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூவர் வெளியிடுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
இதைப்போன்று கள்ள தயாரிப்பு மூலம் அமெரிக்காவிற்குள் வரும் போன்கள் உண்மையான ஆப்பிள் நிறுவன கடைகளில் சீரமைக்கப்பட்டு பின் அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக ப்ரூவர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஐஃபோன்களுக்கு என்றே தனித்துவமான ஐஎம்இஐ எண்கள் இருக்கும். இது அமெரிக்கா மற்றும் கனடாவில் தரநிர்ணயம் செய்த பிறகே விற்பனைக்கு அனுப்பப்படும். அவ்வாறு உள்ள ஒரிஜினல் எண்களை கண்டறிந்து அதனை மாற்றி இவர்கள் கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளதாகவும் இதைபோன்ற விற்பனையால் பல அப்பாவி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார் ப்ரூவர்.
இத்தகைய போலி ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை எஃப்.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 43 கோடி ரூபாய் மதிப்பிலானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 14 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். பயனர்களுக்கே தெரியாமல் அவர்களது ஐஎம்இஐ எண்கள் போலியாக பயன்படுத்தப்படுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், இந்த போலி ஐபோன் விற்பனை குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.