ஓரின சேர்க்கைக்கு அனுமதி வழங்கும் சட்ட மசோதா ஆஸ்திரேலிய செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா, அந்நாட்டு செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 43 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் பதிவாகின. அதேசமயம் ஓரின சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத அமைப்பினர், திருமண ஏற்பாட்டாளர்களிடம் இருந்து உரிய பாதுகாப்பு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செனட் சபையில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் நாடாளுமன்ற கீழ் அவையின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படவுள்ளது. கீழவையில் இம்மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் ஆளும் சுதந்திர தேசிய கூட்டணி கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் ஏற்கெனவே அறிவித்துள்ளன. இதனால் வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கீழவையிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.