பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் அடுத்த புதிய புத்தகம் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில வார இதழொன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், கடந்த வருடம் தனக்கு ஏற்பட்ட கத்திக்குத்து தாக்குதலிலிருந்து தான் இன்னும் மீளவில்லை என பேசியுள்ளார்.
லண்டனை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (இந்திய வம்சாவளி), கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, மேற்கு நியூயார்க்கில் உள்ள Chautauqua நிறுவனத்தில் ஒரு இலக்கிய நிகழ்வில் அவர் தனது விரிவுரையைத் தொடங்க இருந்தார். அங்கு அவர் பேசிக்கொண்டிருந்த போது, ஹதி மதார் (24) என்பவரால் தாக்குதலுக்கு உள்ளானார். இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்டது.
அப்படியான நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் வார இதழான நியூயார்க்கர்-க்கு, The Defiance of Salman Rushdie என்ற பெயரில் இப்போது அவர் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியிருந்த கட்டுரையில், சல்மானின் கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியாகியிருந்தது. மேலும் சல்மானின் புதிய புத்தகமான `Victory City’ குறித்தும் அவர் சில விஷயங்கள் பேசியதாக அதில் தகவல் இடம்பெற்றிருந்தது. தன்னை பற்றிய அக்கட்டுரை குறித்து சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “NewYorker-ல் உள்ள இந்தப் புகைப்படம், சக்தி வாய்ந்தது” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். பின் அப்பதிவு நீக்கப்பட்டது
இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர் இந்த அகமது சல்மான் ருஷ்டி. பின்னாளில் அவரது குடும்பம் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ என்ற தனது படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர் இவர். பின்னர் வந்த 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் புத்தகம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஈரான், சல்மான் ரூஷ்டியின் தலைக்கு விலையும் நிர்ணயித்தது. இதன் காரணமாக சல்மான் ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போதுதான் கொடூரமாக தாக்கப்பட்டார்.
அந்த தாக்குதலில் சல்மான் ருஷ்டியின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 1988-ல், அப்போதைய ஈரானின் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி என்பவர், ருஷ்டிக்கு எதிராக ஃபத்வாவை (இது இஸ்லாமில் ஓர் சட்ட பரிந்துரையென சொல்லப்படுகிறது) வெளியிட்டார். இதன்மூலம் சல்மானை கொலை செய்ய முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் சல்மான் அப்போது எழுதிய The Satanic Verses (சாத்தானிக் வசனங்கள்) என்ற புத்தகத்தின் வெளியீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் தற்போது அவர் மற்றொரு புத்தகம் (Victory City) எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு தொடர்பாகத்தான் அவர் பேட்டியளித்துள்ளார். குறிப்பிட்ட அந்தப் பேட்டியில் சல்மான், “அந்தத் தாக்குதல் என்னை மனரீதியாக பாதித்தது. நான் மீண்டும் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது. நான் எழுத உட்காருவேன், ஆனால் முடியாமல் போகும். அதையும் மீறி நான் எழுதுவேன், ஆனால் அவை எல்லாம் வெறுமையாக இருந்தது. என் உடலில் பெரிய பெரிய காயங்களெல்லாம் உடனே சரியான போதிலும், கையில் ஏற்பட்ட சிறிய காயங்கள் இதுவரை சரியாகவில்லை. அதற்கு, சிகிச்சை எடுத்து வருகிறேன். மற்றபடி, நான் நன்றாக இருக்கிறேன்.
முக்கியமாக என் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் மற்றும் உள்ளங்கையின் கீழ் பாதியில் அதிக வலியை உணர்கிறேன். இதனால் கைக்கு நிறைய சிகிச்சைகள் செய்கிறேன். கசப்புணர்வைத் தவிர்க்க மிகவும் கடினமாக முயற்சித்தேன். இப்போது நான் இருப்பது, ஒரு நல்ல தோற்றம் இல்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் முன்னோக்கிப் பார்த்து மட்டுமே இந்த விஷயத்தை நான் கையாண்டேன், பின்னோக்கிப் பார்ப்பதை செய்யவே மாட்டேன். நேற்று எனக்கு என்ன நடந்தது என்பதை விட நாளை என்ன நடக்கிறது என்பதுதான் எனக்கு முக்கியம்.
பாதிக்கப்பட்ட நபராக என்னை ஏற்ககூடாதென நான் எப்போதும் மிகவும் கடினமாக முயற்சித்தேன். இருப்பினும் சிலர், எங்கேயோ உட்கார்ந்துக்கொண்டு `யாரோ ஒருவர் எனக்குள் கத்தியை மாட்டிவிட்டார்கள்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அப்போதெல்லாம் எனக்கு நானே பரிதாபப்பட்டுக்கொள்வேன். உண்மையில் இது என்னை காயப்படுத்துகிறது. சில வருடங்களுக்கு முன், நான் உயிருடன் இருப்பதையே பலர் விரும்பவில்லை. நான் இறந்திருக்க வேண்டும். ஆனால் வாழ்ந்தேன். இப்போதோ நான் ஏறத்தாழ இறந்துவிட்டேன். ஆனால் இப்போது எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள். அப்போது நான் செய்ததுதான் தவறு. ஏனெனில் அப்போது நான் வாழ்ந்தது மட்டுமல்ல, நன்றாக வாழவும் முயற்சி செய்தேன். அதனால் 15 குத்து காயங்களும் பெற்றேன்” என்று கூறியிருக்கிறார். இதுவும் பேசுபொருளாகி வருகிறது.
இப்பேட்டியில், "பெரும்பான்மையான அமைதியான முஸ்லிம்கள் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் குரானைப் பின்பற்றிய ஒரு முஸ்லீம்தான் என்னைத் தாக்கினார். எல்லா மதங்களும் ஒரே மாதிரி இல்லை, ஏனென்றால் அவர்கள் எந்த மதமும், தன்னை நம்பாதவர்களுக்கு மரணத்தை அறிவிக்கவில்லை. மற்ற எல்லா சமூகம், கலாச்சாரம் மற்றும் மதம் அழிக்கப்படும் வரை அல்லது மாற்றப்படும் வரை இஸ்லாம் ஓயாது என்பதை என் வாழ்க்கையில் நடந்தவை வழியாக நான் உலகுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்” என்று சல்மான் ருஷ்டி கூறியதாக தகவல்கள் பரவின. இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் சல்மான் ருஷ்டி.