கப்பல் பயணத்தின் போது மிகுந்த உடல்களைப்பால் பசிபிக் கடலில் தூங்கிவிழுந்த மாலுமி 14 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூஸிலாந்திலிருந்து பிரிட்டனின் தீவுப்பகுதிகளுக்கு வழக்கமாக செல்லும் கார்கோ கப்பலில் லிதுவேனியாவைச் சேர்ந்த விடாம் பெரெவெர்டிலோவ் என்ற 52 வயது மாலுமி பணியில் இருந்திருக்கிறார். கடந்தவாரம் நியூஸிலாந்திலிருந்து புறப்பட்ட கப்பலில் இரவுப்பணி முடித்துவிட்டு அயர்ச்சியாக இருந்ததால் கப்பலின் வெளிப்பகுதியில் விளிம்பில் அமர்ந்து சற்று காற்றுவாங்கியிருக்கிறார். ஆனால் அப்படியே தூங்கிவிட்டதால் கப்பலிலிருந்து தவறி கடலில் விழுந்துவிட்டார்.
விடாம் கண்விழித்து பார்த்தபோது இருள்சூழ்ந்து, வெகுதூரத்தில் கப்பல் தெரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட 6 மணிநேரங்களாக ஒரு மாலுமி கப்பலில் இல்லை என்பதை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு மாலுமி காணாமல்போனது குறித்து பிரெஞ்ச் கடற்படை விமானத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். 4 மணிவரை அவர் கப்பலில் இருந்ததை உறுதிப்படுத்தியபிறகு, பாலினேசியாவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் 52 வயது மாலுமியை தேடும்பணியில் இறங்கியிருக்கிறது.
கடலின் நடுவில் தத்தளித்துக்கொண்டிருந்த விடாமிற்கு தூரத்தில் ஒரு கரும்புள்ளி தெரிந்திருக்கிறது. எனவே அதைநோக்கி நீந்த முடிவு செய்திருக்கிறார். கிட்டே சென்றபோது யாரோ விட்டுச்சென்ற ஒரு மிதவைப்படகு என்று தெரியவந்திருக்கிறது. அதில் ஏறி அமர்ந்த அவர், மாலை 6 மணிக்கு மீட்பு விமானம் வரும்வரை காத்திருந்திருக்கிறார். எங்கிருந்தோ அபயமிடும் சத்தம் வரவே அங்குசென்று பார்த்த விமானிகள் மாலுமியை மீட்டுக்கொண்டு வந்திருக்கின்றனர்.
இதுபற்றி பத்திரிகைகளில் பேசிய விடாமின் மகன் மாரட், ‘’எனது தந்தைக்கு அவர் கடலில் விழுந்தது தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அவர் மயக்கடைந்திருக்கலாம். இதுபற்றி அவர் என்னிடம் கூறுகையில் சூரியவெளிச்சம் வரும்வரை தனக்கு எதுவுமே தெரியவில்லை என்றார். ஆனால் உயிர்பிழைத்துவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் அதிகமாக இருந்ததாகக் கூறினார்’’ என்று பகிர்ந்துகொண்டார்.