உக்ரைன் எல்லையில் தனது ராணுவத் துருப்புகளை குவித்து வந்த ரஷ்யா, திடீரென படைக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் நாட்டு எல்லையில் கடந்த சில மாதங்களாவே ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வந்தனர். தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்காகவே ரஷ்யா இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாக உக்ரைனும் குற்றம்சாட்டியது. உக்ரைனை ஆக்கிரமிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருந்தபோதிலும், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறாமல் இருந்தது.
இதனிடையே, கடந்த வாரம் உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். அதே சமயத்தில், உக்ரைன் எல்லையை ஒட்டி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களையும் ரஷ்யா நிறுத்தியது. இதனால் உக்ரைனில் எந்நேரம் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்கின்ற சூழல் உருவானது. இந்த போர் பதற்றத்தை தணிப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் அதிபர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று திடீரென உக்ரைன் எல்லையில் இருந்த தனது ராணுவத் துருப்புகளை ரஷ்யா திரும்பப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உக்ரைனும் உறுதி செய்துள்ளது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதையே இது காட்டுவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.