நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருவதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, வரும்நாட்களில் உக்ரைன் முதன்முறையாக ரஷ்யா மீது தொலைதூரத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்ததுடன், ’’ரஷ்யாவினுள் தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி அளிக்க முடிவுசெய்வது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடும்’’ எனவும் எச்சரித்திருந்தது.
இந்த சூழ்நிலையில்தான், ரஷ்யாவிற்குள் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த புடின் அனுமதி வழங்கியுள்ளார். இது ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனுக்கு எதிரான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
தவிர, ஏவுகணைகளை வீசும் நாட்டை மட்டுமல்லாது, அவற்றை வழங்கிய நாட்டின்மீது அணுகுண்டு வீச முடியும் என புதின் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் ரஷ்யாவின் அணுசக்திக் கொள்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அமெரிக்காவைத் தொடர்ந்து, தாங்கள் கொடுத்த ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தலாம் என பிரான்சும் தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையே போர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தவிர, இதனால் மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்பிருப்பதாகப் பலரும் அஞ்சுகின்றனர்.