ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். இந்த அறுவை சிகிச்சை மூலம் திருநங்கை, திருநம்பி என அவர்கள் விரும்பும் பாலினத்துக்கு ஏற்ப பாலுறுப்புகள் மாற்றியமைக்கப்படும். இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையான டுமாவில் (lower house) பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் கீழவையில் மசோதா நிறைவேற்றப்படட் நிலையில், அடுத்ததாக மேலவை மற்றும் அதிபர் விளாடிமிர் புதினின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டும். இவை இரண்டும் எளிதில் கடந்து என்பதால் இந்த சட்டம் நிறைவேறுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
இதுபற்றி டுமாவின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் கூறுகையில், “எங்கள் குடிமக்களையும் எங்கள் குழந்தைகளையும் இந்தச் சட்டம் பாதுகாக்கும். பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது நம் தேசத்தின் சீரழிவுக்கான பாதை. குடும்பங்கள் மற்றும் பாரம்பரிய விழுமியங்களை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரே ஐரோப்பிய நாடு நாங்கள் மட்டுமே. நாம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எதிர்காலம் இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த சட்ட மசோதாவின்படி ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் திருமண அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. அத்துடன் பாலின மாற்றங்களுக்கு உள்ளான நபர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு LGBTQ ஆதாரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மாற்று பாலினத்தவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்குத் தூண்டக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.