கஜகஸ்தான் உள்நாட்டு கலவரத்தை கட்டுப்படுத்த வந்த ரஷ்ய தலைமையிலான ராணுவப்படைகள் 2 நாட்களில் நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டொகோயவ் தெரிவித்திருக்கிறார்.
கஜகஸ்தானில் கடந்த வாரம் எரிபொருள் விலை உயர்வால் கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து கஜகஸ்தான் ஜனாதிபதி டொகோயவின் வேண்டுகோளின் பேரில் கடந்த வாரம் ரஷ்யா தலைமையிலான துருப்புக்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டன. இது தொடர்பாக பேசிய கஜகஸ்தானின் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டொகோயவ், "வன்முறை மற்றும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை கட்டுப்படுத்திய பின்னர் இன்னும் இரண்டு நாட்களில் ரஷ்யா தனது துருப்புக்களை திரும்பப் பெறத் தொடங்கும். இந்த ராணுவத் துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான செயல்முறை 10 நாட்களுக்கு மேல் ஆகாது" என்று கூறினார்.
கஜகஸ்தான் வன்முறை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, கஜகஸ்தானில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். கஜகஸ்தான் நாட்டின் துணைப் பிரதமரிடம் பேசிய வாங் யீ, சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும், வெளிப்படைகளின் தலையீட்டை எதிர்க்கவும் உதவ தயாராக உள்ளதாகக் கூறினார்.