உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு சென்னையில் ரூ.864 அதிகரித்தது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்து 55,865 புள்ளிகளில் வணிகமாகிறது, மேலும் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் சரிந்து வர்த்தகம் ஆகிறது.
பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சில லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுக்கின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்து இன்று காலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். இதனைத் தொடர்ந்து உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது ரஷ்ய ராணுவம். இதன்காரணமாக பல நகரங்களில் குண்டுகள் வீசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ள அதிபர் புதின், அந்த 2 பிராந்தியங்களில் மட்டும் ரஷ்யப்படைகள் அமைதி காக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைனுக்குள் நுழைய ரஷ்யப்படைகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியை புடின் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக, உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் பகுதிகளில் 30 நாட்களுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.