இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் ஒரு தீர்மானத்தை ரஷ்யா முன்மொழிந்துள்ளது. இதுகுறித்து ரஷ்யா தெரிவிக்கையில், “அல் அரபு மருத்துவமனை தாக்கி தகர்க்கப்பட்டதை எப்போதும் மன்னிக்க முடியாது. இந்த போர் குற்றத்திற்கு இஸ்ரேல் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கெனவே நேற்று ரஷ்யா தீர்மானம் கொண்டுவந்தது. அதில், ஹமாஸ் பயங்கரவாத குழு குறித்து எதுவும் குறிப்பிடப்படாமல், தீவிரவாத தாக்குதலை மட்டும் கண்டிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஷ்யா கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மொசாம்பிக், காபோன் ஆகிய 4 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. ரஷ்யாவின் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஆறு நாடுகள் புறக்கணித்தன.
15 நாடுகளின் உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒன்பது நாடுகள் ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனால் ரஷ்யாவின் நேற்றைய தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இச்சூழலில் புதிதாக மேலும் ஒரு தீர்மானத்தை ரஷ்யா மீண்டும் தாக்கல் செய்துள்ளது.