சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ரஷ்யா தனது ஒத்துழைப்பை நிறுத்துகிறது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்துள்ளார்.
நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) மற்றும் கனட விண்வெளி நிறுவனம் (CSA) உடனான பங்களிப்பையும் ரஷ்யா நிறுத்தி வைக்கும் என்று ரோகோசின் கூறினார்.
ரோகோசினால் எழுதப்பட்ட ரஷ்ய மொழி ட்வீட்களில், "சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டாளிகள் மற்றும் பிற கூட்டு திட்டங்களுக்கு இடையிலான இயல்பான உறவுகளை மீட்டெடுப்பது என்பது, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள சட்டவிரோத தடைகளை முழுமையாகவும், நிபந்தனையின்றியும் நீக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்தார்
ரஷ்ய ராக்கெட் மற்றும் விண்வெளித் துறையில் உள்ள பல நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி நாசா, இஎஸ்ஏ மற்றும் சிஎஸ்ஏ ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ரோகோசின் கூறினார்.
இதற்கு பதிலளித்த நாசா, "ரஷ்யா, கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பானுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் சர்வதேச அரசுகளின் விண்வெளி ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கிறது. புதிய மற்றும் தற்போதுள்ள அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தொடர்ச்சியான பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பை தொடர்ந்து அனுமதிக்கின்றன" என கூறியிருக்கிறது
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) என்பது பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் உள்ள பல நாடுகளின் விண்வெளி நிலையமாகும், மேலும் இது முதன்மையாக NASA, ESA, CSA, Roscomos மற்றும் ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி உள்ளிட்ட கூட்டு நிறுவனங்களால் இயக்கப்படுகிறது.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பிறகு அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகோசின், " அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் நோக்கம் என்பது ரஷ்யப் பொருளாதாரத்தைக் கொன்று, நம் மக்களை விரக்தியிலும் பசியிலும் ஆழ்த்துவது, நம் நாட்டை மண்டியிட வைப்பது" என்று கூறினார்.