இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை 130 பேருந்துகள் மூலம் உக்ரைனில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் 9வது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்கிவ & சுமி உள்ளிட்ட நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள், மக்களை ரஷ்யா எல்லைக்கு அழைத்து வருவதற்கு 130 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ரஷ்ய பகுதிகளுக்குள் அவர்கள் அழைத்து வரப்பட்ட அதற்குப் பிறகு உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.
இதற்காக ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தின் நெகோடெயேவ்கா மற்றும் சுட்ஜா சோதனைச் சாவடிகளில் தற்காலிகமாக தங்குவதற்கு முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்குவதற்கு உணவுப் பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போர் நடைபெறக் கூடிய இடத்தில் இருந்து அழைத்து வரக் கூடிய மாணவர்கள் மற்றும் மக்களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுக்களும், மருந்துப் பொருட்களும் எல்லைப்பகுதிகளில் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உக்ரைன்-ரஷ்ய எல்லையில் இருந்து அழைத்துச் செல்லப்படும் மாணவர்கள் மற்றும் பிரஜைகள் ரஷ்யாவின் பெல்கொரோட் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ரஷ்ய விமானங்கள் மற்றும் பிற நாட்டு விமானங்கள் மூலமாக அவரவர் தாயகம் திரும்புவதற்கான உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் தொலைபேசி வாயிலாக பேசியபோது, இந்திய மாணவர்களை மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.