அணு ஆராய்ச்சித் துறையின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வரும் ரஷ்யா, பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சி அடையவைக்கும் அணுகுண்டு வெடிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அணுகுண்டு 27 டன்கள் எடை கொண்டது. எட்டு மீட்டர்கள் நீளம் கொண்டது.
1952ம் ஆண்டு உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டை வெடித்தது அமெரிக்கா. அதன் அழிவுசக்தி ஹிரோஷிமாவில் ஏற்படுத்திய அழிவைவிட 700 மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, 1961 ம் ஆண்டு ரஷ்யாவில் சோதனை செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் அணுகுண்டு சக்தி, ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டைவிட 3,333 மடங்கு அதிகம்.
அந்த அணுகுண்டு வெடிக்கப்பட்ட 30 நிமிட காட்சியை ரஷ்யாவின் அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. அதற்கு ஜார் குண்டு எனப் பெயரிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குண்டுவெடிப்பின் பல கோணங்களும் காட்டப்படுகின்றன. மிகப்பெரிய புகைக் குழம்பை கக்குகிறது அந்த அணுகுண்டு.
வீடியோவுக்கு டாப் சீக்ரெட் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த குண்டு ஆர்டிஎஸ் 220 என்று அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சில படங்களை ரஷ்யா வெளியிட்டிருந்தது.
ரஷ்யா வெடித்த உலகின் மிகப்பெரிய குண்டுவெடிப்பு 75 மைல் தூரத்திற்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அந்தக் காட்சியை 620 மைல் தொலைவில் இருந்தும் பார்க்கமுடிந்தது. அந்தப் புகை மட்டும் 42 மைல் தூரத்திற்குப் பரவியிருந்தது.