கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும், அதனை உக்ரைன் ராணுவம் தடுக்கிறது என்று ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 9 நாட்களாக உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியது. கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் ரஷ்ய படைகள் முயன்று வருகின்றன. இதன் காரணமாக கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து மீட்புப் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.
அதே நேரம் பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இந்நிலையில், கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும், அதனை உக்ரைன் ராணுவம் தடுக்கிறது என்று ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மோதலை தூண்டிவிடப்பார்க்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொருளாதார தடை விதித்தாலும் தங்கள் நாட்டை தனிமைப்படுத்த முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்ய எல்லையில் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பாக வெளியேற்ற உதவ தயார் என்று ரஷ்யா தரப்பில் ஐநாவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.