நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் ஓர் ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமானம் மற்றும் சாலை வழி போக்குவரத்துகளைத் தவிர்த்து வருவதாகவும், அதேநேரம் உள்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இன்றி பயணிக்க ஆடம்பர ரயிலைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. புதின் மட்டுமே பயன்படுத்தும் Ghost Train என்கிற இந்தப் பேய் ரயில் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.
இந்த பேய் ரயிலின் 22 பெட்டிகள் கொண்ட ஆடம்பரமான உள்புறத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்று வருவதுடன் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. லண்டனைச் சேர்ந்த ரஷ்ய விசாரணைக் குழுவான டோசியர் சென்டர் (Dossier Center) என்ற நிறுவனம் இந்த பேய் ரயில் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேய் ரயிலில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள், குண்டு துளைக்காத கதவு மற்றும் ஜன்னல்கள், உயிர்காக்கும் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் என அனைத்தும் வசதிகள் இருப்பதாகவும் அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் புதின் உள்நாட்டிற்குள் வசதியாகவும், ரகசியமாகவும் பயணிக்க இந்த ரயிலை கடந்த 2018 ஆம் ஆண்டு பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அவ்வப்போது மட்டுமே இந்த ரயிலைப் பயன்படுத்தி வந்த புதின், 2022இல் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியபிறகு, இதன் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில், முதன்முதலில் 2014ல் தொடங்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த ரயிலில் முழுமையான உடற்பயிற்சிக் கூடம், மசாஜ் சென்டர், முழுமையான துருக்கிய குளியல் நீராவி அறை, படுக்கையறைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட டைனிங் அறைகள், ஆலோசனைக் கூடங்கள் என பல்வேறு வசதிகள் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செய்தி வெளியிட்டு உள்ளது. அதேநேரத்தில், முக்கிய ஆலோசனைக் கூட்டங்களின்போது ரகசிய அறையில் நடக்கும் உரையாடல்களை மற்றவர்கள் கேட்க முடியாத வகையில் சவுன்ட் ஃப்ரூபிங் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சொகுசு ரயிலில் புதின் கவனித்துக்கொள்ள அழகு நிபுணர் அலுவலகம், உடற்பயிற்சி வல்லுநர்கள் உள்ளிட்டோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திரையரங்கம், முழு கார் ஹவுசிங் டீசல் பவர் ஜெனரேட்டர் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ரயிலில் அதிபர் புதின், வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்கும் வகையில், சாட்டிலைட் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புடன் கூடிய பல்வேறு அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ரயிலின் மொத்த மதிப்பு 74 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.609 கோடி) என கூறப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு செலவு மட்டும் இந்திய மதிப்பில் 130 கோடி ரூபாய் வரை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த ரயிலை இயக்குவதற்காக ஏராளமான பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அழைக்கப்படுவதாகவும், நாடு முழுவதும் உள்ள நகரங்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த ரயிலுக்காக பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக விமானத்தில் விளாடிமிர் புதின் பறந்தால் அதனை எதிரிகளால் ரேடார் மூலம் கண்டுபிடித்து பின்தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியும். ஆனால் ரயில் பயணத்தை எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது. மேலும் புதின் பயணிக்கும் இந்த ரகசிய ரயில் போன்று ரஷ்யாவில் இன்னும் சில ரயில்கள் இயங்கி வருகின்றனவாம். இதனால் எந்த ரயிலில் புதின் செல்வார் என்பது ரகசியம் காக்கப்படுவதோடு, எதிரிகளுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற காரணங்களால்தான் விளாடிமிர் புதின் உள்நாட்டில் விமான பயணங்களுக்கு பதில் இந்த பேய் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதேநேரத்தில், இந்த ரயில் தொடர்பான தகவல்களை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்துள்ளது. அதிபர் புதினிடம் இதுபோன்ற எந்த ரயிலும் இல்லை என்று தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.