உலகம் முழுவதும் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி என்ற கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பொது சபை கூட்டத்தில் பேசியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் - வி மருந்து ஆரம்பக்கட்ட நிலையில் வெற்றி அடைந்துள்ளது. ஆனால் பெரிய அளவில் அதன் பயன்பாடு இன்னும் தொடங்கவில்லை. "நாம் எல்லோருமே இந்த ஆபத்தான வைரஸை எதிர்கொள்ளவேண்டும். அதேபோல ஐநாவின் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்களையும் அது விடவில்லை" என்று புதின் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், " ஐநா ஊழியர்களுக்குத் தேவையான, தகுதியான உதவியை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. குறிப்பாக எங்கள் தடுப்பூசியை அமைப்பின் ஊழியர்களுக்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் இலவசமாக வழங்குகிறோம்" என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தி சோதனை செய்துகொண்டவர்களில் தனது மகளும் ஒருவர் என்றும் புதின் அப்போது சுட்டிக்காட்டினார்.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள ஐநா மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்டெஃபானே டுஜாரிக், ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி கூறியுள்ளார்.