ரஷ்யாவைச் சேர்ந்தவர் மாக்ஸிம் லியுட்டி. சமூக வலைத்தளத்தில் ஆர்வமாய் இயங்கக்கூடியவரான இவருடைய மனைவி, ஒக்ஸானா மிரோனோவா. இவர்களுக்குக்குப் பிறந்த குழந்தைக்கு காஸ்மோஸ் எனப் பெயரிடப்பட்டது. இதில், மாக்ஸிம் லியுட்டி காய்கறிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுபவர் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், ஒரு குழுவை நடத்தி வந்ததாகவும் அதன்மூலம் மற்றவர்களுக்கும் உணவுப் பழக்கவழக்கத்தைக் கற்றுக் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சொந்த குழந்தையைப் பசியால் வருத்தி உயிரிழக்கச் செய்த குற்றத்திற்காக, மாக்ஸிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவரது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைக்கு நீர், உணவு கொடுக்கமால் சூரிய ஒளி மூலம் மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் இருந்துகூட அவரது மனைவியைக் கட்டுப்படுத்தியுள்ளார். சூரிய ஒளி மூலம் மட்டுமே உணவு பெறும் சோதனையைத் தன் குழந்தை மூலம் பரிசோதித்துப் பார்த்துள்ளார். இந்தநிலையில்தான் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக, கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாக்ஸிம், விசாரணையின்போது தன் தவற்றை ஒப்புக்கொண்டார். அதற்கு முன்புவரை அவருடைய ஓக்ஸானா மிரோனோவா மீதே பழி சுமத்தி வந்தார். அவரது மனைவிக்கும் பிணையில் வெளிவரா இயலாத 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மிரோனோவாவின் உறவினரான ஒருவர், "குழந்தைக்கு உணவளிக்கக்கூடாது என மாக்ஸிம் குடும்பத்தில் உள்ள எல்லாரிடமும் தெரிவித்தார். சூரிய ஒளியே குழந்தைக்கு கிடைக்கும் உணவு என அவர் முழுமையாக நம்பினார். அதேநேரத்தில், மிரோனோவா குழந்தைக்கு ரகசியமாக தாய்ப்பால் கொடுக்க முயன்றார். எனினும், மாக்ஸிமைக் கண்டு பயந்துபோனார்” எனத் தெரிவித்துள்ளார்.
மிரோனோவின் தாயார், “சூரிய ஒளி மூலம் மட்டுமே உணவு பெறும் சோதனையைத் தன் குழந்தை மூலம் பரிசோதித்து பார்த்துள்ளார். பரிசோதனை முடிவுகளை வைத்து மற்றவர்களுக்கு, அதாவது தாம் நடத்திவந்த குழு மூலம், இந்த உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவிருந்தார். இதற்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். மகளிடமும் இதுகுறித்து எடுத்துரைத்தேன். அவள், என் பேச்சைக் காதுகொடுத்து கேட்கவில்லை. மாக்ஸிம், என் மகளை ஓர் அடிமைபோல நடத்தினார். அவள், அவரிடமிருந்து பலமுறை வெளியேற நினைத்தார். ஆனால், அவர் ஒவ்வொருமுறையும் அவளைத் தடுத்து நிறுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.