ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்டவர் அலெக்ஸி நவால்னி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக அலெக்ஸி நவால்னியின் மரணம் குறித்து ரஷ்ய சிறைத் துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், நடைப்பயிற்சி சென்ற நவால்னி திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாகவும், இதன்பின் மருத்துவர்கள் முதலுதவிக்குப் பின் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், என்னும் சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தாகவும், அவரது மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவால்னி மரணம் குறித்து அவரது மனைவி யூலியா நவல்னயா "எனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசிடமிருந்து வந்துள்ளதால் அதில் எனக்குச் சந்தேகம் உள்ளது. புதின் மற்றும் அவரது அரசை நம்பமுடியாது. அவர்கள் எப்போதும் பொய்யைத்தான் சொல்வார்கள்.
ஒருவேளை, அந்தச் செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் புதின், அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள், அவரது அரசாங்கம் எனது கணவருக்கு செய்த அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த நாள் விரைவில் வரும்” எனத் தெரிவித்திருந்தார்.
நவால்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தேகத்தை எழுப்பியிருந்தார். ’ரஷ்ய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது. இதற்கு புதின்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதுபோல் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னே ஆகியோரும் நவால்னியின் மரணம் குறித்து கவலை தெரிவித்திருந்ததுடன் கேள்வியும் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், பிப்ரவரி 17ஆம் தேதி உயிரிழந்த நவால்னியின் உடல் இன்றுதான் (பிப்.19) வெளியில் கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவச் சோதனைகளுக்காக வெளியில் கொண்டுவரப்பட்ட நவால்னி உடல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான போராட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. விஷம் கொடுத்து மர்மமான முறையில் நவால்னி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற பல்வேறு குற்றசாட்டுகளை அவரது ஆதரவாளர்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது மரணம் குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்ய நாட்டு ஊடகம் ஒன்று, நவால்னி மரணத்தில் ஆரம்பம் முதலே நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், நவால்னி உடலில் தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயம் இருந்ததாகவும், இந்த காயங்கள் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அதனை சிலர் கட்டுப்படுத்த முயற்சித்தபோது ஏற்பட்ட காயமாகக்கூட இருக்கலாம் என மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
இருந்தும், இறப்புகுறித்த உறுதியான தகவல்கள் பற்றி அறிய, நவால்னி உடலை பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும். ஆனால், அரசியல்ரீதியாக பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால், இன்னும் பிரேதப் பரிசோதனை நடைபெறாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தாமதம் நவால்னி மரணம் குறித்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆர்டிக் சிறையில் ஒருவர் உயிரிழந்தால், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிளாஸ்கோவா தெருவில் உள்ள தடயவியல் மருத்துவப் பணியகத்திற்கு முதலில் கொண்டுசெல்லப்படும். ஆனால், அதற்கு மாற்றாக அலெக்ஸி நவல்னியின் உடல் முதலில் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள லாபிட்னாங்கி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் சலேகார்ட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. ஆகையால்தான் இதில் சந்தேகம் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
அலெக்ஸி நவால்னியின் சட்டக்குழு, ’நவால்னி சிறையில் கொல்லப்பட்டதாகவும், அதனால்தான் அவரது மரணத்திற்கான காரணத்தை அதிகாரிகள் வெளிப்படையாகக் கூற மறுக்கிறார்கள்’ என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
நவால்னி மரணத்திற்குப் பின்னர், அதிபர் புதினுக்கு எதிராக ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதுவரையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக நாடு முழுக்க பல்வேறு பகுதியில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் பலர் காவல்துறையினரின் அடக்குமுறையை எதிர்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்களிடம் அதிருப்தியைப் பெற்றுள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.