இந்தியாவால் தேடப்படும் நபரும், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவருமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மருத்துவமனையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மர்ம நபர் ஒருவரால், தாவூத் இப்ராகிமுக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட அவர், கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகவல் குறித்த எந்தவித ஆதாரமான செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை. போலியான செய்தி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்டட்டும் வீட்டுக்காவல் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் அந்தச் செய்தியை உறுதிசெய்யப்படவில்லை.
மும்பையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக தாவூத் இப்ராஹிம் அறியப்படுகிறார். இதையடுத்து, இவரை, இந்திய அரசின் மிக முக்கியமான தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில்தான், இப்ராகிம் பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றன.
தாவூத் இப்ராகிமிற்கு, மொத்தம் 2 மனைவிகள். அவருடைய முதல் மனைவி பெயர் மைசாபின். தாவூத்திற்கு முதல் மனைவி வாயிலாக மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முதல் மகள் பெயர் மாருக். இவர்தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட் மகன் ஜுனைத்தை திருமணம் செய்துள்ளார்.
இவர்களுடைய திருமணம் கடந்த 2005ஆம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதன்பேரிலேயே, தாவூத் இப்ராகிம் - ஜாவேத் மியாண்டட் ஆகிய இருவரும் நெருங்கிய உறவினர்களாக உள்ளனர். அதன்பேரிலேயே, இப்ராகிம் பற்றிய செய்தி வதந்தியான நிலையில், ஜாவேத் குடும்பத்தினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் உலா வருகிறது.