இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ப்ராட்டி எனும் மாவட்டம் உள்ளது. இப்பகுதி ரோமில் மிகவும் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்று. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு 38 வயதுடைய திருடர் ஒருவர் வீட்டை கொள்ளை அடிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அந்த குடியிருப்பின் பால்கனி வழியாக உள்ளே சென்ற அவருக்கு, மேஜை மீதிருந்த புத்தகம் ஒன்றினைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மேஜை மீதிருந்த புத்தகம் கிரேக்க புராணம் தொடர்பாக ஜியோவானி நுச்சியின் the gods at six o'clock புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திருடன் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு அதை எடுத்து படிக்க ஆரம்பித்துள்ளார்.
வீட்டுக்குள் திருட வந்தவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததைக் கண்டதும், வீட்டின் உரிமையாளர் அவரை காவலில் பிடித்துக் கொடுக்க முற்பட்டுள்ளார். அப்போது திருடன் அதே பால்கனி வழியாக தப்பிக்க முயன்றுள்ளார். ஆனாலும், சிறிது நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார். காவலில் பிடிபட்டாலும் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்ப்பதற்காக கட்டடத்தில் ஏறியதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
திருட வந்த நபரைக் கைது செய்தபோது, அவர் அன்று மாலை மற்றொரு வீட்டில் திருடியிருந்த விலையுயர்ந்த ஆடைகள் அடங்கிய பை ஒன்றை வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருட வந்தவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்து பிடிபட்ட செய்தி அறிந்த அந்த புத்தகத்தின் ஆசிரியர் ஜியோவானி நுச்சி, அவருக்கு புத்தகத்தின் பிரதி ஒன்றை அனுப்ப விரும்புவதாக தெரிவித்தார்.