இங்கிலாந்து நாட்டில் மருத்துவப் பணியாளர்களுக்காக மளிகை உள்ளிட்ட பொருட்கள் ரோபோக்கள் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா சிகிச்சைக்காக பல மணிநேரம் வேலை பார்க்கும் அவர்களுக்கு உணவு மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க நேரம் இருக்காது என்பதால், இங்கிலாந்து நாட்டின் மில்டன் கீனெஸ் நகரில் ரோபோக்களை கொண்டு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு இலவசமாகவே இந்த சேவை வழங்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
மணிக்கு 6 கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவு பயணிக்கும் பெட்டி வடிவ ரோபோக்கள், உணர்நுட்ப கருவிகள், கேமராக்கள், ரேடாருடன் இயங்குகின்றன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஸ்டார்ஷிப் டெக்னாலஜிஸ் நிறுவனம், தற்போதைய பொதுமுடக்க காலத்தில் இதுபோன்ற தானியங்கி ரோபோக்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது.
தேவை அதிகரிப்பால் ரோபோக்களின் எண்ணிக்கையும் 70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மில்டன் கீனெஸ் நகரைத் தொடர்ந்து பிற இங்கிலாந்து நகரங்களிலும் இந்த ரோபோக்களின் பயன்பாடு வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது