காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் (ஜூன் 18), கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி அதிர்வலைகள் தொடர்ந்தன. கடந்த மாதம்கூட இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும், அதன்பேரில், அந்த தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து இரு நாட்டுத் தரப்பிலும் இப்பிரச்னை நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை அந்நாட்டு காவல்துறையினர் கையாண்ட விதம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக, சுயெல்லாவை பதவிநீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. காஸாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் வான்வழி மற்றும் தரைவழியாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போருக்கு ஆதரவாகவும், எதிராகவும் உலகெங்கும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டனிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அச்சமயம் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாகவும், பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டும் போலீஸ் அனுமதி தருவதாகவும் சுயெல்லா கூறியது சர்ச்சையானது.
அத்துடன், பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஹாமஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த போராட்டத்திற்கு தொடர்பு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
சுயெல்லாவின் கருத்துக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஆளும் கர்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களும் சுயெல்லாவின் கருத்தை கடுமையாக விமர்சித்தனர்.
முதலில் அமைச்சரவையில் இருந்து அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நீக்க மறுத்தார். இந்நிலையில், அழுத்தம் வலுப்பெற்றதால் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை பதவிநீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். அவரது பதவி நீக்கத்திற்கு, பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் கிளவர்லி உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காலியான வெளியான வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா, பிரிட்டனில் 2022 அக்டோபர் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அவர், இதுபோன்று சர்ச்சையில் பேசி சிக்குவது முதல்முறையல்ல.. பல தடவை பேசியிருப்பதாக பிரிட்டன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.