அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இருந்து வந்த கடிதத்தில் இருந்த இலக்கண பிழைகளை திருத்தி மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர்.
அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் வசித்து வருபவர் யோவான் மேசன். 17 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியவர். தற்போது பணி ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பார்க்லாந்தில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தனித்தனியாக ட்ரம்ப் சந்திக்க வேண்டும் என கோரி யோவான் மேசன் வெள்ளை மாளிகைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு ட்ரம்பிடம் இருந்து யோவான் மேசனுக்கு பதில் கடிதம் வந்துள்ளது. ஆனால் அதில் ஒரு சில பிழைகள் இருந்துள்ளன. இதனையடுத்து அந்த பிழைகளை திருத்திய யோவான் மேசன் மீண்டும் அதனை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை யோவான் மேசன் கூறும்போது, “அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து நீங்கள் கடிதங்களைப் அனுப்பும்போது குறைந்தபட்சம் அதில் பிழைகள் இல்லை என்பதையாவது உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.