#MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் பேசி வருகின்றனர்.
பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் இன்றும் பெண்கள் பல இடங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஜாக்சன் காட்ஸ் என்பவர் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இது குறித்து ஒரு சர்வே எடுத்தார். அதன்படி பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பித்துகொள்ள தினந்தோறும் என்னென்ன செயல்களையெல்லாம் கடைபிடிக்கிறீர்கள் என்ற கேள்வி இரு தரப்பிடமும் கேட்கப்பட்டது. இந்த சர்வேயின் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சர்வேயின் முடிவை ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் ஆண்கள் “ஒன்றுமில்லை. அது பற்றி நான் யோசிப்பதில்லை” என்ற ஒரே பதிலையே தெரிவித்துள்ளனர்.
இதே கேள்வி பெண்களிடம் கேட்கப்பட்டது. அதில், ''காரில் ஏறும்போது காரின் பின்சீட்டை கவனிப்பேன். இரவில் தூங்கும் போது கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிடுவேன். இரவில் நடைப்பயிற்சி செல்லமாட்டேன். முதல் மாடியை வாடக்கைக்கு விடமாட்டேன். நண்பர்களுடனே வெளியே செல்வேன். ஆண்களை நேருக்குநேர் பார்க்க மாட்டேன். செல்போனை எப்போதும் கையில் வைத்திருப்பேன். கையில் பெப்பர் ஸ்பிரே வைத்திருப்பேன்'' உள்ளிட்ட பல தரப்பட்ட பதில்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ட்வீட்டை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்துள்ளனர். தாங்களும் இந்த முறைகளை கையாள்கிறோம் என்றும், இதன் மூலம் சில விழிப்புணர்வு தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் பல பெண்கள் ட்வீட் செய்துள்ளனர்