கொரோனாவுக்கான மருந்தா "ரெம்டெசி‌வியர்" ?

கொரோனாவுக்கான மருந்தா "ரெம்டெசி‌வியர்" ?
கொரோனாவுக்கான மருந்தா "ரெம்டெசி‌வியர்" ?
Published on

கொரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தயாராகும் ரெம்டெசிவியர் ‌மருந்து, பல்வேறு நாடுகளிலும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு மருந்து வேண்டும் என்று அமெரிக்கா இந்தியாவிடம் கேட்ட நாள்கள் போய், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கும் காலம் வரும் என்று தோன்றுகிறது. காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த கிலியட் சைன்சஸ் நிறுவனம் தயாரிக்கும் ரெம்டெசிவியர் என்ற மருந்து. கொரோனா பாதித்த சுமார் ஆயிரம் பேருக்கு ரெம்டெசிவியர் மருந்தைக் கொடுத்ததில், அவர்கள் 11 நாள்களில் குணமடைந்ததாக அமெரிக்காவின் தொற்றுநோய் நிறுவனத் தலைவர் அந்தோனி பவுச்சி அறிவித்தார்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை மட்டுமே கொண்டு ஒருவர் குணமடைவதற்கு குறைந்தது 15 நாள்கள் ஆகும் நிலையில், ரெம்டெசிவியர் அவர்களை 5 முதல் 11 நாள்களில் கொரோனாவில் இருந்து குணமாக்கியதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவத் தொடங்கிய நாளில் இருந்தே அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தபோது, உலகம் முழுவதும் அந்த மருந்து பிரபலமடைந்தது.மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏதும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதயம் தொடர்பான பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. எச்ஐவி கிருமிக்கு எதிரான இரு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி நடந்த பரிசோதனைகளும் தோல்வியடைந்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் ரெம்டெசிவியர் பற்றிய அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ரெம்டெசிவியர் தயாரிக்கும் Gilead நிறுவனம், அமெரிக்காவுக்கு மட்டுமே இலவசமாக அளித்திருக்கிறது. இந்தியா, வங்கதேசம் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், உலகின் பிற நாடுகளுக்கும் சோதனைக்காக, குறைந்த அளவு மட்டுமே அனுப்பப் பட்டிருக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை டாக்டர் ரெட்டிஸ், சிப்லா உள்ளிட்ட பல்வேறு மருந்து நிறுவனங்களுடன் கிலியட் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. ரெம்டெசிவியர் மருந்து காப்புரிமைக்கு உள்பட்டது என்பதால், அதைத் தயாரிப்பதற்கு கிலியட் நிறுவனத்திடம் உரிமம் பெற்றாக வேண்டும். அதனால் மருந்தின் விலை மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான பெக்சிம்கோ நிறுவனம் கிலியட் நிறுவனத்துடன் இணைந்து ரெம்டெசிவியர் மருந்தைத் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகி இருக்கும் தகவலின்படி ஒரு நேரத்தில் ஊசி போடுவதற்கான மருந்தின் விலை மட்டும் 5 ஆயிரத்து 400 ரூபாயாக இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது.ஒரு நோயாளிக்கு 5 முதல் 11 முறை ஊசி போடுவதற்கு சுமார் 55 ஆயிரம் வரை செலவாகக் கூடும். ஆயினும் கிலியட் நிறுவனம் இன்னும் மருந்துக்கான விலையை நிர்ணயிக்கவில்லை.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் பெருந்தொற்றுநோய் பாதிப்பு இருக்கும் நிலையில், காப்புரிமை மற்றும் கட்டாய உரிமம் பெறும் நடைமுறைகள் பன்னாட்டு உடன்பாடுகளின்படி தளர்த்தப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை ரெம்டெசிவியர் மருந்து சிறப்பானது என நிரூபிக்கப்பட்டு, உரிம நடைமுறைகளும் தளர்த்தப்பட்டால், உலகுக்கே கொரோனாவுக்கான மருந்து எளிதாகக் கிடைக்கக்கூடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com