கனடாவின் தெற்குபகுதியில் நேற்று 115 டிகிரி பாரன்ஹீட் ( 46.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவானது. இது கனடாவில் இதுவரை பதிவான மிக அதிகமான வெப்பநிலையாகும். இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதித்திருக்கிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு உட்புறத்தில் அமைந்துள்ள லிட்டன் கிராமத்தில் இந்த மிக அதிகமான வெப்பநிலை நேற்று பதிவானது. அமெரிக்க பசிபிக் வடமேற்கில் ஏற்பட்ட ‘வெப்ப குவிமாடம்’ எனப்படும் ஒரு நிகழ்வு வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். வாஷிங்டன், ஓரிகான், இடாஹோ, வயோமிங் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளும் அதிக வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளன.
"இந்த நிகழ்வு உள்நாட்டு வடமேற்கில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக தீவிரமான மற்றும் நீடித்த வெப்ப அலைகளில் ஒன்றாக இருக்கும். இந்த வார இறுதியில் மற்றும் அடுத்த வாரத்தில் வெப்பநிலை இப்பகுதி முழுவதும் உயரும்” என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்தது.
கனடாவில் இதற்கு முன்பு 1937-ஆம் ஆண்டில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை மத்திய மாகாணமான சஸ்காட்செவனில் பதிவானது.
இந்த வெப்பநிலை உயர்வால் தற்போது மேற்கு கனடா வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளது. உயிருக்கு ஆபத்தான வெப்பத்தில் இருந்து காக்க, மக்கள் குளிர்ச்சியான சூழலில் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சியாட் நகரத்தின் 725,000 மக்கள் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட குளிர்ச்சியான இடங்களில் தங்கவும், வீட்டில் குளிர்சாதன வசதி இல்லையென்றால் அரசின் "குளிரூட்டும் மையத்திற்கு" செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். கடுமையான வெப்பத்தின் விளைவாக பொது போக்குவரத்து, அவசர மருத்துவ சேவைகளில் தாமதங்கள் மற்றும் மின் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
மிக அதிக வெப்பமான வானிலை இப்பகுதியில் அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் புதிய சிவப்புக் கொடி எச்சரிக்கைகளை NWS வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது.