சமீபத்தில் இந்திய அரசு உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய குடிமக்களுக்கு அறிவுரை அளித்திருந்தாலும், இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டிலேயே தங்கி தங்களுடைய படிப்பை தொடர்ந்து வருகின்றனர். படிப்பு பாதியிலேயே நின்று விடக்கூடாது என்கிற கவலையில், இவர்கள் போர் ஆபத்தையும் பொருட்படுத்தாது கிவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பை முடிக்க முயற்சி செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தங்களுடைய படிப்பை முடிக்க வாய்ப்பு இல்லை என்கிற கட்டாயத்தால் உக்ரைனிலிருக்கும் இந்திய மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்பை பணயம் வைத்து உக்கிரனின் நாட்டில் தங்கி உள்ளனர். சமீபத்தில் ரஷ்யா ஏவுகணைகள் மூலமாகவும், ஆளில்லாத டிரோன் விமானங்கள் மூலமாகவும் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளது.
உக்ரைன் படைகளும் ரஷ்யா கட்டுப்பாட்டிலிருந்த பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ளதாகவும் பல ரஷ்ய பீரங்கிகள் மற்றும் விமானங்களை தாக்கி அழித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை பயன்படுத்த கூட தயங்க மாட்டோம் என்றும் எப்படியாவது எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம் எனவும் ரஷ்யா கூறி வருகிறது. அதே சமயத்தில் உக்ரைன் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் உடனடியாக கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் எனவும், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
இதனால் போர் மேலும் தீவிரமடையும் என கருதும் இந்திய அரசு, உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என 19ம் தேதி அறிவுரையை வெளியிட்டது. அப்போதும் இந்தியர்கள் பலர், குறிப்பாக மாணவர்கள், வெளியேறாத காரணத்தால், மீண்டும் ஒரு அறிவுரையை அக்டோபர் 25ம் தேதி வெளியிட்டது. எப்படியாவது உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியர்கள் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தங்கி இருந்தால் அவர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என கருதப்படுகிறது. இதனால்தான் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கியபோது, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 20,000 இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்தனர். பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர். அங்கேரி மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மாணவர்களை அழைத்த இந்திய அரசு, பின்னர் சிறப்பு விமான சேவைகள் மூலம் அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்தது. அத்தகைய சூழ்நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேற இதுவரை இரண்டு அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன என வெளியுறவு துறை அதிகாரிகள் விளக்கினர்.
ஆனால் இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே பல வருடங்கள் உக்ரைன் நாட்டில் படித்த நிலையில், எப்படியாவது தங்கள் படிப்பு தடைப்படாமல், தாமதமின்றி முடிய வேண்டும் என விரும்புகின்றனர். மருத்துவ படிப்பை இந்தியாவில் தொடர வழி கிடைக்கவில்லை என்பது இவர்களுடைய சிக்கலாக உள்ளது. அங்கேரி மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் படிப்பை இவர்கள் தொடர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அந்த நாடுகளில் படிப்பது செலவை மேலும் அதிகமாகும் எனவும் மாணவர்கள் கருதுகின்றனர்.
ஆகவே, போர் தீவிரமடையும் ஆபத்து இருந்தாலும், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கி தாங்கள் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். ஒருவேளை போர் அதிகம் தீவிரமடைந்து உக்ரைன் நாட்டில் தங்க முடியாத சூழல் ஏற்பட்டால், சாலை மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ ஹங்கேரி மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லலாம் என்பது இவர்களின் திட்டமாக உள்ளது. உக்ரைன் நாட்டில் போர் பாதிப்பு இருப்பதால், அங்கேரி மற்றும் பின்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் உக்ரைன் நாட்டிலிருந்து வருபவர்களுக்கு தற்காலிக விசா வழங்கி வருகின்றன. இந்தியா திரும்பி சென்றால், மீண்டும் உக்ரைன் வருவது கடினம் என்றும், செலவு மேலும் அதிகரிக்கும் என்பது மாணவர்களின் கவலையாக உள்ளது.
- கணபதி சுப்ரமணியம்