ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்கள் நீடிக்கின்றன: இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்

ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்கள் நீடிக்கின்றன: இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்
ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்கள் நீடிக்கின்றன: இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்
Published on

பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் 70வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “முழு நாட்டையும், அதன் மக்களையும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும், கிளர்ச்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் இன்னமும் நீடிப்பதனால் அவற்றிற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 70 வருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நாங்கள் ஐக்கியமான மக்களாக இருந்தோம். இலங்கையின் எல்லா மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறவே விரும்பியிருந்தோம். உண்மையில் யாழ்பாண இளைஞர் காங்கிரஸானது டொமினியன் அந்தஸ்தை விரும்பாது முழுமையான சுதந்திரம், வேண்டுமென்று தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது” என்றார்.

“எமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில், சரியாக சொன்னால் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்களாயின், அது பெரும் சோகமாகவே முடியும். முன்பு இருந்த நிலைமைகளோடு ஒப்பிடும்போது தற்போதைய நிலையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், கூடுதலான அமைதியும் சுமுக நிலைமையும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், “கடந்த 70 வருட காலமாக நாங்கள் தேர்தல் முறையின் ஊடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கின்றோம் என்றாலும், அது குறை காணப்படாத, பூரணமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் வழிமுறை மட்டும் ஜனநாயக ஆட்சி முறையை உறுதிப்படுத்த மாட்டாது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சேவை செய்வதையே பெரும்பாலும் தேர்தல் முறைமை தன்னகத்தே கொண்டுள்ளது” என தெரிவித்தார்.

“பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டும் அதற்கு மதிப்பளிக்கும் பொருட்டும் மேற்கொள்ளப்பட்ட அனேக முயற்சிகளின் விளைவாக இந்த நாட்டின் மதிப்பு வாய்ந்த தலைவர்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் துரதிஷ்டவசமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உள்நாட்டு உருவாக்கம் என உரிமை கோரப்பட்ட அரசியலமைப்புக்கள் சுயசேவைக்கு அப்பால் பன்முகத்தன்மையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு சேவையாற்ற முடியாதவைகளாகவும், மாறாகப் பெரும்பான்மைவாதத்தை மேலும் உறுதிப்படுத்துபவையாகவுமே அமைந்திருந்தன” என்றார்.

“கணிசமான தேசிய ஒருங்கிசைவின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களின் ஊடாக பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, வன்முறைகளும் மோதல்களும் அற்ற எதிர்காலத்தை நாட்டில் உருவாக்கும் பொருட்டு பல்வேறு செயல்முறைகளில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது. இதன் அர்த்தம் யாதெனில், இலங்கை மக்கள் தமது இன, மத வேறுபாடுகள் அற்ற வகையில் ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கை தமது சொந்த நாடு எனவும், இலங்கையர் என்ற அடையாளத்துடன் தாம் இலங்கை தேசத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியினர் என்பதையும் விரும்பி ஏற்பார்கள் என்பதே” என குறிப்பிட்டார்.

“ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கி செல்லவே நாம் முயற்சிக்கிறோம். இந்த விடயத்தில் ஏற்காமை எதுவும் இருக்கும் என நான் எண்ணவில்லை. இலங்கை வெற்றியடைய வேண்டும் என்ற எமது விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்த குறிக்கோளை அடைய நாம் அனைவரும் ஐக்கியமாக செயற்பட வேண்டியதே அவசியமாகும்” என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com