உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ தான் காரணமா? - ஓர் பார்வை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ தான் காரணமா? - ஓர் பார்வை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ தான் காரணமா? - ஓர் பார்வை
Published on

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில், மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை நேட்டோ. நேட்டோ என்றால் என்ன?. அதற்கும் இந்த போருக்கும் என்ன தொடர்பு என்று விரிவாகக் காணலாம்.

The North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கம்தான் NATO. அதாவது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது தான், இதன் தமிழாக்கம். அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல் ஆகிய 12 நாடுகள், 1949-ல், உலகப் போருக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட, ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் இந்த நேட்டோ.

இந்த 12 நாடுகளைத் தவிர, அல்பேனியா, பெலாரஸ், ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து உள்ளிட்ட 30 நாடுகள், இந்த நேட்டோவில் உறுப்பு நாடுகளாக உள்ளது. இதில் உக்ரைனை சேர்க்க வேண்டும் அல்லது சேர்க்கக் கூடாது என்பதற்காகத்தான், தற்போது ரஷ்யா அந்நாட்டின் மீது போர் செய்து வருகிறது.

இந்த அமைப்பின் ஒப்பந்தத்தின்படி, நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது, பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில், பிற நாடுகளும் உதவிக்கு வர வேண்டும் என்பதுதான் அடிப்படையான சாராம்சம். எனவே, தனக்கு அண்டை நாடான வல்லாதிக்கம் கொண்ட ரஷ்யா, எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் மீது போர் தொடுக்கலாம் என்பதால், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த, இந்த அமைப்பில் சேர விரும்புகிறது உக்ரைன்.

அதே நேரத்தில் பிற நாடுகள் வந்து உட்கார்ந்து கொண்டு, அதன்மூலம் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், என்பதால், அதனை தடுக்க வேண்டுமென முனைப்பில் இருக்கிறது ரஷ்யா. இதில், ரஷ்யாவிற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கோபம் என்னவென்றால், கடந்த 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த நாடுகளில், பலவும் நேட்டோ படைகளில் இணைந்திருந்தது தான்.

கடந்த 1950-களில் இருந்தே நேட்டோவிற்கும், ரஷ்யாவிற்கும் ஏழாம் பொருத்தம் தான். ஏற்கனவே, அதனை தனது பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கும் ரஷ்யா, அதில் கூடுதல் பலத்தை சேர்க்கும் வகையில், ஐரோப்பிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான உக்ரைனை, நேட்டோ அமைப்பில் சேர்ப்பதை கொஞ்சம்கூட விரும்பவில்லை.

எனவே, உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் எப்பொழுதும் சேர்க்கப்படாது என்ற உறுதிப்பாட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என மேற்குலக நாடுகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால். அது கைகூடாததன் எதிரொலியாக தான், தற்பொழுது உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியுள்ளது ரஷ்யா.

ஏனென்றால், ஏற்கனவே சோவியத் யூனியன் பிளவுபட்டது போன்ற மற்றொரு பெரிய அடியை, ரஷ்யா விரும்பவில்லை, எனவே, நேட்டோ அமைப்பை பலப்படுத்தி, அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட போட்டி நாடுகள், எங்கே தங்கள் அதிகார வரம்பிற்குள் வந்து விடுவார்களோ என்ற அச்சம் ரஷ்யாவிற்கு எப்போதுமே இருந்து வருகிறது.

காரணம் நேட்டோ அமைப்பு, தனது பன்னாட்டு போர்த் தளவாடங்களை, ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்டோனியா, லித்துவேனியா, போலாந்து ஆகியவற்றில் வைத்திருக்கிறது. மேலும், ரஷ்யாவின் வான் தாக்குதலை தடுக்கும் வகையில் ரஷ்யாவின் எல்லைப் பகுதி நாடுகள் அனைத்திலும், நேட்டோ தனது படைகளை குவித்து வைத்துள்ளது. ஏற்கனவே இந்தப் படைகள் அனைத்துமே வெளியேற்றப்பட வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவது என்பது கொஞ்சம் கூட ரஷ்யா விரும்பாத ஒன்று தான். எனவேதான் ரஷ்யா இந்தப் போரில் இறங்கியுள்ளது.

-நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com