இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக அநுர குமரா திசநாயக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமரா திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக புதிய சட்டங்களை இயற்றுவதில் ஆளும் அதிபர் தரப்பு கட்சிக்கு சிக்கல் இருந்தது. இந்த நிலையில், பதவியேற்ற அநுர குமரா திசநாயக, அடுத்த நாளே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். இதையடுத்து, இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் அதிபர் அநுர குமரா திசநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி, அதிக மெஜாரிட்டியுடன் கைப்பற்றும் நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் உள்ளது. இதை எதிர்த்து பல்வேறு கட்சிகளும் போட்டியில் உள்ளன.
அதேநேரத்தில், இலங்கை அரசியலில் நெடுங்காலமாகக் கோலோட்சி வந்த மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர், இந்த தேர்தலிலிருந்து பின்வாங்கியிருப்பது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ராஜபக்சேவைத் தவிர, முன்னாள் அதிபர்கள் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மைத்ரிபால சிறிசேனாவும் விலகியுள்ளனர். பிரபல எதிர்க்கட்சி அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் கடும்போக்கு தேசியவாத அரசியல்வாதியான விமல் வீரவன்சவும் பின்வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து NPP உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க, "இந்த ஊழல் மற்றும் இனவெறி அரசியல்வாதிகள் தோல்வியைத் தவிர்ப்பதற்காக போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார். ஆனால், ராஜபக்சே சகோதரர்களின் போட்டி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, சமல் ராஜபக்சேவின் மகன் ஷஷீந்திர ராஜபக்சே இந்த தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அது அப்போதைய அரசுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியாக வெடித்தது. அந்தச் சமயத்தில், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம், இலங்கையை விட்டு தப்பியோடினர். அதேசமயத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக இருந்தார். அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான் சமீபத்திய அதிபர் தேர்தலிலும் நமல் ராஜபக்சே போட்டியிட்டார். 38 பேர் போட்டியிட்ட நிலையில், அநுர குமாரா 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால், நமல் ராஜபக்சே வெறும் 2.92 சதவீதம் பெற்ற நிலையில், 4வது இடத்தைப் பிடித்து மிக படுதோல்வி அடைந்தார். மொத்தமே, அவர் 46,757 வாக்குகள்தான் பெற்றிருந்தார். இவர், முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார். இதைத் தொடர்ந்து நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி வினோஜா, மாமனார் உள்ளிட்டோர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் எதிரொலியாகத்தான் ராஜபக்சே குடும்பத்தினர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் பலரும் அரசியல் மற்றும் அதிகார பதவிகளில் கோலோச்சியதால்தான் இலங்கை மக்களின் கோபத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் ராஜபக்சே குடும்பத்தின் 22 ஆண்டுக்கால ஊழல் அரசியல்தான் என்பது அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது. இதற்கான முடிவுகளை ராஜபக்சே குடும்பம் எடுத்ததுதான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. மேலும், தமிழர்கள் மீதான இனவெறி படுகொலைகள் குறித்து மகிந்தா ராஜ்பக்சே மீது பல மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன. இதனால்தான் அவர்கள் சந்திக்கும் சமீபத்திய தேர்தல்களில் எல்லாம் தோல்வி முகமே உள்ளது. அதேநேரத்தில், ரணில் விக்கிரமசிங்கே மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் அதிருப்தியில் இருந்த இலங்கை மக்கள், புதுமுகத்தைத் தேர்ந்தெடுக்கும் முடிவில் இருந்தனர். அதன்படியே, அநுர குமாரா அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர்மீது மக்களுக்கு நல்ல மரியாதையும், எதிர்பார்ப்புகளும் இருந்தன. ஊழலற்ற அரசை உருவாக்குவதாகவும் உறுதிமொழி கொடுத்திருந்தார்.
இலங்கையைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதலே இலங்கை சுதந்திர கட்சியில் இருந்துவந்தவர் மகிந்த ராஜபக்சே. 2018இல் அந்த கட்சியை உடைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மேலும், இவர் அரசியலில் இருந்தபோது இவரது தம்பிகளான கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரை அரசியலில் அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவிக்கு கொண்டுவந்தார். மகிந்த ராஜபக்சேவின் மற்றோரு தம்பியான சமல் ராஜபக்சேவும் அவரது மகன் நமல் ராஜபக்சேவும் அமைச்சராக இருந்தவர்கள்தான். இவரின் மற்றொரு மகனும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவர்தான்.
இலங்கையில் ஆரம்பத்தில் பிரதானமானவையாக இருந்த இரண்டு கட்சிகளில் ஒன்று, இலங்கை சுதந்திர கட்சி. இதன் தலைரான பண்டாரநாயகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கையில் சிங்களம் மட்டுமே தேசிய மொழி, பவுத்தம் மட்டுமே தேசிய மதம் என இன, மத அரசியல் கூர்மைப்படுத்தப்பட்டது, அதற்கு சட்டவடிவமும் கொடுக்கப்பட்டது. இந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்தான் டி.ஏ.ராஜபக்சே, இவர்தான் மகிந்த ராஜபக்சேவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.