அமெரிக்காவில் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக எலிகள் சிறிய ரக கார்களை ஓட்டி அசத்துகின்றன.
அமெரிக்காவில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் நெகிழி பெட்டிகளை கொண்டு எலிகளுக்காக பிரத்யேக காரை வடிவமைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். காருக்குள் மூன்று செப்புக் கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளை தொடும் போது கார் முன்னோக்கியும், வலது, இடது புறமாகவும் நகர்ந்து செல்கிறது. இதன் மூலம் எலிகள் இந்த சிறிய ரக கார்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துள்ளனர் கெல்லி லம்பேர்ட் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்.
ஆறு பெண் மற்றும் நான்கு ஆண் எலிகளைத் தேர்ந்தெடுத்து இந்த கார்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்தனர். சோதனைக்காக கட்டப்பட்ட நான்கு சதுர மீட்டர் அரங்கில் இந்த சிறிய ரக கார்கள் இயக்கப்பட்டன. ஆரம்பத்தில் எலிகளுக்கு செப்புக் கம்பிகளைத் தொட்டால் உணவு வழங்கப்பட்டது. பின்னர் உணவின் அளவு அதிகரிக்கப்பட்டது. ஆனால் இம்முறை உணவைப் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் புதிய சவாலுக்கு ஏற்றவாறு உணவைப் பெறுவதற்காக எலிகள் காரை கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டத் தொடங்கின. அறிவாற்றல் மற்றும் மன ஆரோக்கியத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள இந்த நடைமுறையை பின்பற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.