இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க எலிகளை கொண்ட படைகள் இருந்தால் எப்படி இருக்கும் என எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா?
நீங்கள் சரியாகத்தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். கொறித்திண்ணிகளான எலிகளை மீட்டு படையினராக உருமாற்றி அதற்கு பயிற்சிகளும் வழங்கி வருகிறார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் டோனா கீன்.
நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக எலிகளுக்கு தரமான பயிற்சி கொடுத்து வருகிறார் கீன். இதுகாறும், 7 எலிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எலிகளுக்கு backpack அணிவிக்கப்பட்டு அதில் மைக்ரோஃபோன், லொகேஷன் ட்ராக்கரும் பொருத்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தால் பீப் ஒலிக்கு பதிலளிக்கும் வகையிலும் அந்த எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இதற்காக Hero Rats என்ற பெயரில் NGO அமைப்பான APOPO உடன் இணைந்து மருத்துவர் கீன் பணியாற்றி வருகிறார். சுமார் 170 எலிகளுக்கு பயிற்சி கொடுத்து, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் துருக்கி நாட்டுக்கு அனுப்பி மீட்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர் கீன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாய்களையே இதுப்போன்ற மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் எலிகளால் சிறு சிறு பொந்துகளிலும் செல்லமுடியும் என்பதை கருத்தில் ஹீரோ ரேட்ஸ் திட்டத்தில் இறங்கியிருக்கிறோம். மேலும், எலிகளிடம் இருக்கும் backpack மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் எங்களால் பேசவும் முடியும் என கீன் கூறியுள்ளார்.
விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் பற்பல வகைகளில் பரிணாம வளர்ச்சியை சந்தித்துக் கொண்டே வருவதற்கு இதுவும் உதாரணமாக இருக்கிறது.