50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா முழுவதும் பரவலாக காணப்பட்டது. தட்டான் பூச்சி வடிவிலிருக்கும் இந்த லேஸ்விங் பூச்சியின் இறகே சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கும். காலநிலை மாற்றம், வாழ்விட ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ராட்சத லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் வேகமாக அழியத் தொடங்கியது. 1950களுக்குப் பிறகு இந்த லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் எங்குமே தென்படவில்லை. இதனால் லேஸ்விங் பூச்சிகள் முற்றிலும் அழிந்துபோயிருக்கலாம் என சூழலியாளர்கள் முடிவுக்கு வந்தனர். லேஸ்விங் பூச்சியின் மாதிரிகூட சேகரித்து வைக்கப்படாததால் இந்த பூச்சியை குறித்த ஆராய்ச்சியில் தொய்வு காணப்பட்டது.
பின்னர் 2012ஆம் ஆண்டில் பூச்சியியல் ஆராய்ச்சியாளரான மைக்கேல் ஸ்க்வார்லா என்பவர் லேஸ்விங் பூச்சியின் மாதிரியை கண்டுபிடித்தார். ஆனால் அது உண்மையில் லேஸ்விங் பூச்சியின் மாதிரிதானா என்பதில் பல சந்தேகங்கள் நிலவின. இறுதியில் கடந்த 2020ஆம் ஆண்டில் மைக்கேல் ஸ்க்வார்லா கண்டுபிடித்தது லேஸ்விங் பூச்சியின் மாதிரிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் அமைந்துள்ள வால்மார்ட்டில் லேஸ்விங் பூச்சியை பார்த்ததாகவும், அப்பூச்சியின் மாதிரியை சேகரித்து டிஎன்ஏ பகுப்பாய்வு செய்ததில் அது லேஸ்விங் பூச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார் மைக்கேல் ஸ்க்வார்லா . இந்த பூச்சி தற்போது அமெரிக்காவின் பென் மாநிலத்தில் உள்ள ஃப்ரோஸ்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. பென் மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளாக லேஸ்விங் பூச்சி எங்குமே தென்படாத சூழலில் தற்போது அங்கு பூச்சி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லேஸ்விங் பூச்சி கடைசியாக கண்டறியப்பட்ட இடம் பென் மாநிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில் உள்ளது. அவ்வளவு தூரத்தில் இருந்து பூச்சி பயணித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் லேஸ்விங் பூச்சியின் திடீர் உதயம் மர்மமாக உள்ளது என்கின்றனர் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள்.