'இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த வேண்டும்' - இலங்கை அதிபா் விக்ரமசிங்க
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மக்களின் கொந்தளிப்பால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினர். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்தாண்டு பொறுப்பேற்றார். தற்போது இலங்கை படிப்படியாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து வருகிறது.
இச்சூழலில் கொழும்பில் நடந்த இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் அதிபா் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ''கடந்த 75 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான், கொரியா, சீனா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகள் பெரும் வளர்ச்சியைப் பெற்றன. தற்போது இந்தியாவின் முறை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மற்ற நாடுகளையும், இந்தியா தன் வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை, வளர்ச்சியை கண்டு வருகிறது.
தற்போது அமெரிக்காவின் டாலர் பொது கரன்சியாக பயன்படுத்தப்படுகிறது. அதுபோல, இந்திய ரூபாயையும் பயன்படுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான முழு தகுதி இந்தியாவுக்கு உள்ளது. இந்திய ரூபாயை பொதுவான செலாவணியாகப் பயன்படுத்த இலங்கை தயங்கவில்லை. இந்திய ரூபாய் பொதுவான செலாவணியாக மாறினால், அதனால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதை பாா்க்க இலங்கை விரும்புகிறது
உலகம் படிப்படியாக வளா்ச்சி கண்டு வருகிறது. அதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. வளமான வரலாறு, கலாசார பாரம்பரியம் என 2,500 ஆண்டுகளாக நீடிக்கும் வா்த்தக உறவுடன் இந்தியாவுக்கு அருகில் இருந்து இலங்கை பயனடைகிறது. ஜப்பான், கொரியா, சீனா போன்ற கிழக்காசிய நாடுகள் 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டது போல, தற்போது இந்திய பெருங்கடல் பகுதியுடன் இணைந்து இந்தியா வளா்ச்சி காண்கிறது'' என்றார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 21ஆம் தேதி இந்தியாவிற்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.