இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் அதிபர் பதவியை கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் நடந்த முக்கியமான விஷயங்கள் சிலவற்றை காணலாம்.
* ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். டலஸ் அழகம்பெரும 82 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அனுரா குமார திசநாயகா வெறும் 3 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
* கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை ரணில் அதிபராக தொடர்ந்து செயல்படுவார். 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
* அதிபர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்திருந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். நாட்டு நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும், தனது ஆதரவை, போட்டி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமவுக்கு தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலை இரண்டு எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
* கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், இலங்கையில் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இன்று ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றதும் இலங்கையில் அவரச நிலை பிரகடனத்தை நீட்டித்து உத்தரவிட்டார்.
* ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்பது பொதுமக்களின் இரண்டாவது முக்கிய கோரிக்கையாக இருந்த நிலையில், அவர் அதிபராக தேர்வானதால் மீண்டும் போராட்டத்தை நோக்கி நகர்கிறது இலங்கை. நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ரணில் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: UK PM: பிரதமர் போட்டியில் முந்தும் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக்- பிரிட்டனில் நடப்பது என்ன?