இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஒரேநாளில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவிடம் மோதல் போக்கு நீடித்த நிலையில், அவரை திடீரென நீக்கி அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்தார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக அறிவித்த அதிபர், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இது குறித்து அதிபர் சிறிசேன எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை அரசியலமைப்பின் 42 பிரிவின்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எட்டு மணிநேரத்தில் நடந்துள்ள நீக்கமும், புதிய பிரதமர் நியமனமும் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றது குறித்து பேசிய ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், தம்மை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். ராஜபக்சேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிரோதமானது என்றும் அரசமைப்புக்கு விரோதமானது என குறிப்பிட்டார்.
இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கான பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
வரும் நவம்பர் 16 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதாக மைத்ரிபால சிறிசேன அறிவித்ததை அடுத்து, ரணில் விக்ரமசிங்கேவுக்கான பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட அரசு வாகனமும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்ட அரசியல் மாற்றம் தொடர்பாக இன்று சிறிசேன உரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் அரசமைப்பு சட்டத்தின்படி, பிரதமரை, அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது என்ற விதியை மீறி, மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ராஜபக்ச அமைச்சரவையை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தனக்கு போதிய அளவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.