இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தின் உடல், இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் கடந்த 8ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகாராணியின் இறுதி சடங்கு வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதியில் திங்களன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலக தலைவர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்தியா சார்பாக இங்கிலாந்து சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார். ராணி எலிசெபத்தின் இறுதி ஊர்வலத்தின் முடிவில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அப்போது, ஒலி இடையூறுகளை தவிர்க்க பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கிலாந்து முழுவதும் 125 திரையரங்குகளில் இறுதி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மட்டுமின்றி பூங்காக்கள், சதுக்கங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், இறுதி சடங்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இங்கிலாந்து வரலாற்றில் பிற முக்கிய நிகழ்வுகளை விட, மகாராணியின் இறுதி சடங்கில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரிட்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.